Wednesday 24 September 2014

முதலியார் ஆவணங்கள்
தமிழினி, சென்னை, நவம்பர் 2006.
ரூ. 170, பக். 222, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் ஊரில் வாழ்ந்த முதலியார் குடும்பம் பாதுகாத்து வைத்திருந்த ஓலை ஆவணங்களில் தேர்ந்தெடுத்த 89 ஆவணங்களின் தொகுப்பு. இந்த ஆவணங்கள் தென் திருவிதாங்கூரின் நிர்வாகம் குறித்தவை. ஏறத்தாள கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் எழுதப்பட்டவை. தமிழ் மொழியிலும், தமிழ்மொழி எழுத்தில் மலையாள மொழியிலும் அமைந்தவை.
            இந்த ஆவணங்களில் பெரும்பகுதி கவிமணியின் கையெழுத்து பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றிற்கு சிறு முகவுரை, விளக்கம் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 4 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி முதலியார் ஆவணங்களைப் பற்றிய 56 பக்கக் கட்டுரை. இது 11 தலைப்புகள் கொண்டது. முக்கியமாக கி.பி. 14,15,16,17,18 நூற்றாண்டுகளில் விவசாயம், நெல் விலை, வரி, நிர்வாகம், படையெடுப்பு, அடிமை நிலை குறித்த செய்திகளை விவரிப்பது.
            இரண்டாம் பகுதியில் 89 முதலியார் ஆவணங்களின் மூலங்கள் உள்ளன. மூன்றாம் பகுதி பின்னிணைப்புகள். இதில் வெள்ளாடிச்சி வெள்ளாட்டி ஓலை, பறை அடிமை ஓலை, சீதன ஓலை, அருஞ்சொல் விளக்கம் என 13 தலைப்புகள் உள்ளன. நான்காம் பகுதியில் காலக் கணக்கு குறிப்புகள், இந்தியப் பஞ்சாங்கம், சுழற்சி வருஷம், எண்களைக் குறிப்பிட தமிழ் அடையாளம் என 7 தலைப்புகள்.
            நூலின் முகவுரை நன்றியுரை ஆய்வுக்குதவிய நூல்களின் பட்டியல் ஆகியன உள்ளன.

            புதிய பார்வை மாத இதழில் சோழநாடன் என்பவர் இந்நூல் குறித்து விரிவான விமர்சனம் எழுதியுள்ளார். (16- 3- 2007) தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொண்டு வந்ததில் முதலியார் ஆவணத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. பழைய ஆவணங்களைப் பதிப்பிக்கும்போது மூலத்தை மட்டுமே பலரும் (தனி நபரும் அரசு வெளியீடுகளும்) பதிப்பித்துள்ளனர். மூலத்திற்கான விளக்கவுரை ஆய்வுரை போன்றவை எழுதுவதில்லை. அ.கா. பெருமாள் அரும்பாடுபட்டு தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூலில் அந்தக் குறைகள் இல்லை. ஆவணங்களை எப்படிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற முறையில் செம்பதிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment