Friday 19 September 2014


நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு சொல்லகராதி

தமிழினி, சென்னை, நவம்பர் 2004.
ரூ. 65, பக். 144, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தமிழக வட்டார வழக்கு அகராதி வரிசையில் ஒன்று. தமிழ் பல்கலை பேராசிரியர் ராஜாராமின் அணிந்துரை, ஆசிரியரின் முகவுரை என அமைந்தது. இந்த அகராதியில் 3423 சொற்களும், 60க்கு மேற்பட்ட வரைபடங்களும் உள்ளன. இந்நூல் பற்றி ப. கோலப்பன் இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய விமர்சனத்தில் (25.02.2005) “… கடின உழைப்பு, கள ஆய்வில் செய்திகளைத் திரட்டி வகைப்படுத்தல், புத்தகங்களின் ஆழ்ந்த வாசிப்பு மூன்றும் இவரது பிளஸ் பாய்ன்ட்ஸ். இதன் பலன் இந்த அகராதிஎன்கிறார்.
            உங்கள் நூலகம் மாத இதழில், பெருமாள் முருகன் (செப்டம்பர் 2008) இந்த அகராதி பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இவர்... இவ்வகராதிக்கு எழுதியுள்ள முன்னுரை தனிச்சிறப்புடையது. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட எவற்றின் உதவியும் இல்லாமல் சுயஆர்வம் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இக்காரியத்தை நிறைவேற்றியுள்ளார் அ.கா. பெருமாள்; போற்றுதல் நம் கடன்என்கிறார்.
நல்லதங்காள்
தன்னன்னானே, சென்னை 2004.
ரூ. 65, பக். 152, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            நல்லதங்காள் கதை தமிழகத்தில் பரவலாக அறிந்த கதை. அதன் மூன்று வடிவங்கள் இந்த நூலில் உள்ளது. முகவுரை, நல்லதங்காள் கதைச் சுருக்கம், நல்லதங்காள் மூலப்பாடல், நல்லதங்காள் தோல்பாவைக்கூத்து, நல்லதங்காள் நாடகம் என ஐந்து இயல்கள் கொண்டது. 12 வரைபடங்கள் உள்ளன.
தென்குமரியின் கதை
யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை, டிசம்பர் 2003.
ரூ.180, பக். 336, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை 2003இல் வெளிவந்த சிறந்த நூலுக்கான விருது பெற்ற நூல். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டுகளின் வரலாற்று சமூக விடுதலை வரலாற்றை விரிவாக கூறும் நூல். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முன்னுரை, ஆசிரியர் உரை கூடியது. ஆய் அண்டிரன் முதல் 1956 வரை என்னும் முதல் பகுதியில் ஆய் அரசர், பாண்டியர், சோழர், விஜயநகர அரசு, வேணாட்டரசு, திருவிதாங்கூர் அரசு விடுதலைக்குப் பின் உள்ள வரலாறு கூறப்படுகிறது. தேசிய சமூக விடுதலை பகுதியில் தென்குமரியில் நடந்த அடிமை விடுதலை, மேலாடைக் கலகம், கோவில் நுழைவு, சுதந்திரப்போராட்ட செய்திகள் உள்ளன. மதங்களும் பங்களிப்பும் என்னும் பகுதியில் சைவ, வைணவ, சமண, புத்த, கிறுஸ்தவ, இஸ்லாமிய கோவில்கள் பற்றியும் அய்யா வைகுண்டர் பற்றியும் செய்திகள் உள்ளன. கல்வி கலைகள் என்னும் இறுதிப்பகுதியில் தென் குமரியின் கல்வி, மருத்துவப்பணி, விழா, படைப்பாளிகள், கலைகள் பற்றிய செய்திகள் உள்ளன. இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான நூற்களின் நீண்ட பட்டியல் உள்ளது. 80 அரிய படங்களும் உள்ளன.
            இந்நூல் வெளியான சில மாதங்களிலேயே 1000 பிரதிகள் விற்பனை ஆயின. இந்நூல் பற்றி தினமணி பத்திரிகை (17.06.2014) மிக ஆழமான வாசிப்பறிவும் கடினமான உழைப்பும் விரிவான கள ஆய்வும் கொண்ட நூல் இது என்று முன்னுரையில் நாஞ்சில்நாடன் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானதேஎன விமர்சிக்கிறது.


தெய்வங்கள் முளைக்கும் நிலம்
தமிழினி சென்னை, டிசம்பர் 2003.
ரூ. 100, பக்கம்.240, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            நாட்டார் தெய்வம், வழிபாடு, வில்லிசைப் பாடல்கள் பற்றிய நூல். 8 இயல்கள் நாட்டார் தெய்வக் கருத்தாக்கங்கள், வில்லிசைப் பாடல்களில் சிவன் குறித்த செய்திகள் நாட்டார் வழக்காறுகளில் முருகன் குறித்த செய்திகள், முத்தாரம்மன் கோவில் சமூகப் பங்களிப்பு, சுடலைமாடன் கதையும் வழிபாடும், வலங்கை இடங்கை சாதிகளும் கதைப்பாடல்களும், வில்லிசைப் பாடல்களில் பதிப்பும் பாட வேறுபாடும் ஆகியன. பின்னிணைப்பில் வில்லிசை பாடல்களின் பட்டியல், நாட்டார் தெய்வ வழிபாடு குறித்த நூல்கள், கட்டுரைகள் பட்டியல் ஆகியன உள்ளன. 19 அரிய படங்களும் உண்டு.

            ஆசிரியரின் முகவுரை, பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் நகர்நடுவே நடுக்காடுஎன்னும் தலைப்பிலான அணிந்துரை இரண்டும் உண்டு.

குருகுல மக்கள் கதை 
(பஞ்சபாண்டவர் சரிதம்)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2003.
ரூ. 80, பக். 208, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            கன்னியாகுமரி மாவட்டம், புதூர் ஊரில் உள்ள பஞ்சபாண்டவர் கோவில் விழாவில் வில்லிசை நிகழ்வில் பாடப்படும் கதை. 5480 வரிகள். ஏடு/கையெழுத்துப் பிரதி/வாய்மொழி ஆகியவற்றின் வழி சேகரிக்கப்பட்டது. முகவுரை, கதைச்சுருக்கம், குறிப்புரை உண்டு. இந்நூல் திருப்பதி தேவஸ்தான நிதிநல்கை பெற்று வெளியிடப்பட்டது.
இராமாயணத் தோல்பாவைக்கூத்து
தன்னனானே, சென்னை, 2003.
ரூ. 90, பக்.214, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            
                   தோல்பாவைக்கூத்து கலைக்குரிய ராமாயணம். மொத்தம் 21 மணிநேர ராமாயணக் கூத்தை ஒலிப்பதிவு செய்து எழுதப்பட்ட நூல். தமாஷ் காட்சிகள், உரையாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கலைமாமணி பரமசிவராவ் நடத்தியது. கூடவே மூத்த கலைஞர் சுப்பையாராவ் பாடினார். கதை நிகழ்வுகள் எவையும் விடுபடவில்லை. ஒருவகையில் இதை வாய்மொழி ராமாயணம் எனலாம். 
           தோல்பாவைக்கூத்து பற்றிய அறிமுகஉரை, மொத்த நிகழ்ச்சியின் சுருக்கம் (40 பக்கங்கள்) உண்டு. பரமசிவராவின் பேச்சு மொழி மாற்றப்படவில்லை. மொத்த நிகழ்ச்சியின் பாடல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டன.
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவில்
ரோகிணி ஏஜன்சீஸ் நாகர்கோவில், நவம்பர் 2003.
ரூ. 35, பக். 128, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பறக்கை என்னும் கிராமத்தில் உள்ள மதுசூதனப் பெருமாள் கோவில் வரலாறு. பறக்கை ஊரும் சிறப்பும், பறக்கை ஊர்ப் பெயர், பறக்கைத் தலபுராணமும் வாய்மொழிக் கதைகளும், கோவிலின் அமைப்பும் பிறவும், கோவிலின் சிற்பங்களும் விமானமும், பறக்கைக் கல்வெட்டுகளின் நிபந்தச் செய்திகள், பறக்கையில் உள்ள காசிவிசுவநாதர் கோவில், வடக்குத் தெரு மகாதேவன் கோவில், திருவாவடுதுறை மடம், வலிகொலி அம்மன் கோவில் ஆகியவை பற்றிய செய்திகள் உள்ளன.

            முகவுரை, டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, 13 பின்னிணைப்புகள் உண்டு. 26 படங்களும் உள்ளன. அணிந்துரை எழுதிய வ.அய்.சு. நூலைப் படித்தவுடன் பறக்கை கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற உந்துதலில் அங்கு சென்று கண்டு வியந்தேன் என்கிறார்.
ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2003.
ரூ. 35, பக். 144, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            கேரளத்து ஸ்ரீ நாராயணகுரு (1854 – 1928) மகாஞானியும் சமூக விழிப்புணர்வாளர்களாகவும் கருதப்படுபவர். திருவனந்தபுரத்தை அடுத்த செம்பழந்தி கிராமத்தில் பிறந்த குரு மரபு வழியான இந்துப் பண்பாட்டில் இருந்துகொண்டு தன்னை நிலைநிறுத்த வேண்டும் என கூறியவர். இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது இந்நூல். முகவுரை உட்பட 8 இயல்களையும் 5 பின்னிணைப்புகளையும் கொண்டது. ஸ்ரீநாராயண குரு எழுதிய நூற்களின் பட்டியல், சுப்ரமணிய பாரதி குரு பற்றி எழுதிய பகுதி பின்னிணைப்பில் உண்டு
              மருத்துவாழ்மலை ஸ்ரீநாராயண குரு ஆசிரமம் துறவியால் பாராட்டப்பட்ட நூல்.
கவிமணியின் கவிதைகள் (ப.ஆ.
(முழுதும் அடங்கிய ஆய்வுப் பதிப்பு)
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், நவம்பர், 2002.
ரூ. 300, பக். 670, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதிய மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர்கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனங்கள் ஆகியவை அடங்கிய ஒரே முதல் தொகுப்பு. ஏற்கெனவே வெளிவந்த மலரும் மாலையும் தொகுப்பில் இல்லாத 119 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. அதோடு மலரும் மாலையும் தொகுப்பில் 196 அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மருமக்கள் வழி மான்மியத்தில் 300க்கு மேல் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
            இந்நூலில் முகவுரை சுந்தர மூர்த்தியின் அணிந்துரை, தே. வேலப்பனின் ஆய்வுரை, நன்றியுரை ஆகியவையும் 17 பின்னிணைப்புகளும் உண்டு. பின்னிணைப்பில் அடிக்குறிப்புகள்; வையாபுரிப் பிள்ளையின் முகவுரை, கவிமணி குறித்த மலர்கள், இதழ்கள், நூல்கள் பட்டியல், கவிமணியின் வாழ்க்கை குறிப்புகள், பாடல், முதல் குறிப்பு, அகரவரிசை ஆகியன உள்ளன. கவிமணியின் அரிய 25 படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
            இந்நூல் பற்றி Hindu பத்திரிகையில் (14.10.2003) ஜே. பார்த்த சாரதி விரிவான விமர்சனம் எழுதியிருந்தார். அது பின்வருமாறு,

            The editor have taken pains to search out hither to unpublished poems numbering 119 from journals and manuscripts and added to his output shown in this book. He have also done a good job of textual criticism noting down variations between the texts as published and the manuscripts of the poet and also adding explanatory footnotes…