Wednesday 24 September 2014

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் 

(மகாபாரதம் பற்றிய நாட்டார் கதைகள்)

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
டிசம்பர் 2012. ரூ. 175, பக் 223, டெம்மி அளவு.

            மகாபாரதம் தொடர்பான கதைகள், அம்மானை வடிவில் அமைந்ததன் உரைநடை வடிவம், புகழேந்தி புலவர் பெயரில் உள்ளவை. நீண்ட முகவுரை உண்டு. இந்நூலில் அல்லி அரசாணி மாலை, புலந்தரன் களவு மாலை, பவளக்கொடி மாலை, அலிமன்னன் சுந்தரிமாலை, ஆரவல்லி ஆரவல்லி கதை, ஏணியேற்றம், பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதை குறம், திரௌபதை அம்மானை, மின்னொளியான் குறம், வித்துவான் குறம், பொன்னுருவி மசக்கை, கர்ண மகாராசன், கன்னட மக்கள் கதை, அரவான் கதை ஆகிய இக்கதைகள் முழுவதும் பாரதத்திலிருந்து வேறுபட்டவை. இந்நூலில் மிகப் பழைய 80 படங்கள் உண்டு.

தென்குமரியின் சரித்திரம்

சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். செப்டம்பர் 2012, 2013.
ரூ. 75, 
            தென்குமரியின் கதை நூலின் சுருக்கப்பதிப்பு. 11இயல்கள், முகவுரை, டாக்டர் தெ. வேலப்பனின் அணிந்துரை உண்டு. 143 அபூர்வமான படங்களும் 2 வரைபடங்களும் உள்ளன.
உணவுப் பண்பாடு

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஏப்ரல் 2012.
ரூ. 115, பக். 180, டெம்மி அளவு.

            இந்நூலில் உள்ள கட்டுரைகள் உங்கள் நூலகம், மலையாள மனோரமா இயர்புக் (தமிழ்) பனுவல் சாளரம். காலச்சுவடு ஆகிய இதழ்களில் வந்தவை. பதிப்புரை, நன்றியுரை நீங்க 9 கட்டுரைகள். அவை உணவுப் பண்பாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், நிலைத்த பனுவலும், நிகழ்த்துதல் மறுவலும், தமிழகத்தில் விழாக்கள், கிறுத்தவ விழாக்கள், இசுலாமிய விழாக்கள், ஆண்டாளும் ஆமுக்தமால்யதவும், குலசேகர ஆழ்வாரின் காலம், நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் (கதைப் பாடல்களை முன்வைத்து) ஆகியன. எல்லாமே ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

காலந்தோறும் தொன்மம்

தமிழினி, சென்னை, டிசம்பர் 11.
ரூ. 90, பக். 143, டெம்மி அளவு.

           வல்லினம், உங்கள் நூலகம், காலச்சுவடு, ஒளிவெள்ளம், திணை என சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. பழம் புராணங்களில் பொதிந்த தொன்மம் காலந்தோறும் நினைக்கப்படுகிறது; இலக்கியங்களில் மையம் கொள்கிறது என்பது மையம். இந்நூலில் அகலிகை கதை நப்பண்ணனார் முதல் புதுமைப்பித்தன் வரை, நந்தனார் அக்கினிப் பிரவேசம், பிள்ளையைக்கொன்ற பாட்டு, சிலப்பதிகாரமும் கோவலன் கதைகளும், கைசிக நாடகம் என 5 கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பில் 12 பழம் தொன்மக்கதைகளும் பிள்ளைக்கறி மருந்துப்பட்டியலும், புகழேந்திப்புலவரின் கோவலன் அம்மானைச் சுருக்கமும் 9 பழைய படங்களும் உள்ளன.

சிவாலய ஓட்டம்

காலச்சுவடு பதிப்பகம், நவம்பர் 2011.
ரூ. 199, பக். 248, டெம்மி அளவு.

            கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழாவன்று பன்னிரு சிவாலயங்களுக்கு ஓடிச்செல்லும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இக்கோவில்கள் இருக்கும் ஊர்கள் முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பள்ளிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகியன. இங்குள்ள சிவன் கோவில்களின் வரலாற்றை வழக்காறு, கல்வெட்டுகள் அடிப்படையில் கூறுவது இந்நூல். இக்கோவில்கள் தொடர்பான கதைகளும் உள்ளன. 24 பின்னிணைப்புகள் உள்ளன. இவை கோவில் தொடர்பான கல்வெட்டுகள், புராணம் தொடர்பான, சிவன் கோவில்களுக்குச் செல்வது தொடர்பான வழக்காறுகள் ஆகியனவாம். இதில் 138 படங்கள் உள்ளன.

இராமன் எத்தனை இராமனடி

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் 2010.
ரூ. 175, பக். 232, டெம்மி அளவு.

                    இராமாயணம் தொடர்பான நாட்டார் கதைகள், அவை குறித்த விமர்சனம், இந்நூலில் 2 பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் இராமன் எத்த இராமனடி, ஜைன ராமாயணம், தோல்பாவைக்கூத்தில் ராமாயணம், இராமாயணத் தோல்பாவைக்கூத்து, இராம கீர்த்தனம், சூர்பநகையின் பரிதாபம், தக்கை ராமாயணம் ஆக எட்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியில் ஒரே இலையில் அனுமனும் இராமனும் சாப்பிட்ட கதை உட்பட 117 கதைகள் உள்ளன. பின்னிணைப்பில் இராமாயணச் சிற்பங்கள் பட்டியல், இராமாயணக் கதையில் வரும் புராணங்கள் பட்டியல், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் இராமாயணப் பட்டியல் போன்றன உள்ளன. இந்நூலில் நாட்டார் இராமாயணம் தொடர்பான 122 பழைய படங்கள் உள்ளன.

சடங்கில் கரைந்த கலைகள்

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், நவம்பர் 2009,  அக்டோபர் 2010.
ரூ. 140, பக். 184, டெம்மி அளவு.

            நாட்டார் தெய்வ விழா, சடங்குகள் தொடர்பான கலைகள் குறித்த நூல். இத்தகு கலைகள் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், கண்ணன் விளையாட்டு, களம் எழுத்தும் பாட்டும் ஆகியன. இவை பற்றி விளக்கும் நூல். பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை முகவுரை உண்டு. பின்னிணைப்பில் 11 தலைப்புகள் உள்ளன. 52 படங்களும் உண்டு.

அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ.)

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 
டிசம்பர் 2009. ரூ. 350, பக். 592, டெம்மி அளவு, 
அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தமிழ் மாவட்டங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும், திருவனந்தபுரம் மாவட்டத்திலும் நடைமுறையில் உள்ள அய்யா வழிபாடுதொடர்பான நூல். அய்யாவைகுண்டர் அருளியது. 15196 வரிகள் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அய்யாவின் இப்புனித நூல் இந்த வழிபாட்டுக்காரர்களால் பாராயணம் செய்யப்படுவது. 
               முதல் முறையாக அய்யா வழி அல்லாத ஒருவரால் பதிப்பிக்கப்படுவது. அய்யா வழிபாட்டின் பிரதம குருவான பாலபிரஜாதிபதி அடிகளாரின் வாழ்த்துரையும் பதிப்பாசிரியரின் முகவுரையும் உண்டு. இம் முகவுரை 80 பக்கங்கள் கொண்டது. இந்த முகவுரை ஆராய்ச்சி முகவுரை; இதுவரை அகிலத்திரட்டைப் பார்த்த பார்வையிலிருந்து மாறுபட்டது; நுட்பமான செய்திகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன; குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் பற்றிய அகிலத்திரட்டில் வரும் செய்திகளின் விளக்கம் இதற்கு முந்தய பதிப்புகளில் இல்லாதவைஎன்று இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார்.

            இந்நூலைப் பதிப்பித்ததற்காக பதிப்பகத்தாரும், பதிப்பாசிரியரும் குறிப்பிட்ட சிலரால் பழிக்கப்பட்டனர். இப்பதிப்பை வாங்குதல் கூடாது எனவும் தீர்மானம் போட்டனர். ஆனால் தமிழகத்தில் அய்யாவழியினரில் சிலரும், அல்லாதவரும் இப்புத்தகத்தை வாங்கினர். இப்போது இது அச்சில் இல்லை.

படிக்கக் கேட்ட கதைகள்

மருதம் வெளியீடு, நெய்வேலி, டிசம்பர் 2008.
ரூ. 80, பக். 142, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            அம்மானை வடிவிலும், உரைநடையிலும் உள்ள 8 கதைகளின் எளிய வடிவம், இந்நூலில் உள்ள கதைகள் சித்திர புத்திர நயினார் கதை, நளச்சக்கரவர்த்தி கதை, புரூ சக்கரவர்த்தி கதை, கோவலன் கதை, மயில் ராகவணன் கதை, காத்தவராய சாமி கதை, நல்லதங்காள் கதை, மதுரை வீரன் கதை ஆகியன. கதை தொடர்பாக 60 வரைபடங்களும் இந்நூலில் உள்ளன.

குடிபோதை புனைவுகள் தெளிவுகள் (ப.ஆ.)

தமிழினி, சென்னை, டிசம்பர் 2008.
ரூ. 200, பக். 256

            நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம் என்னும் தலைப்பில் 2006 டிசம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் நடந்த கருத்தரங்கில் குடியும் குடிசார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும் குறித்து படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இக்கருத்தரங்கை இயேசு சபை நடத்தியது. 3 நாட்களில் 22 பேர்கள் கட்டுரை படித்தனர். சிலர் பேசினர்; உரையாடல் வழி தம் கருத்தைச் சொல்லினர். (ரவிக்குமார்) இவற்றை எல்லாம் கட்டுரையாக மாற்றி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. குடி பற்றிய வித்தியாசமான நூல் இது.

நாஞ்சில் நாட்டு 

மருமக்கள்வழி மான்மியம் (ப.ஆ.)

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 
டிசம்பர் 2008, ஆகஸ்ட் 2010.
ரூ. 180, பக். 248, டெம்மி அளவு.
            கவிமணி எழுதிய மருமக்கள் வழி மான்மியத்தின் பதிப்பு. மான்மியம் முன்பு பாரிநிலையத்தால் பதிப்பிக்கப்பட்டது; மான்மியம் முதல்பதிப்பு 1942இல் வந்தது. பாரிநிலையம் கவிமணியின் நூற்களை வெளியிட உரிமை பெற்ற பின்பு 1953இல் மான்மியத்தை வெளியிட்டது. அப்போது 248 அடிக்குறிப்புகள் இருந்தன. இவற்றில் 12 அடிக்குறிப்புகள் தவறானவை. பாரி நிலையப் பதிப்பு எந்த மாற்றமும் இன்றி அப்படியே வந்தது. இந்தப் பதிப்பில் (காலச்சுவடு) தான் முதல் முதலாக 498 அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டன. மருமக்கள்வழி குறித்த விரிவான (47 பக்கம்) கட்டுரை இப்பதிப்பில் உண்டு. மான்மியம் வெளிவந்தபோது தமிழன் பத்திரிகை ஆசிரியர் எழுதிய (1916) அறிமுக உரை முதன்முதலாக இந்த மான்மியப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

            இப்பதிப்பின் பின்னிணைப்பில் மருமக்கள் வழி தொடர்பாக கவிமணி எழுதிய 37 பாடல்கள், மான்மியத்தின் பா வடிவம், கவிமணியின் வாழ்க்கை குறிப்பு, கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் குறித்த ஆங்கிலக் கட்டுரை, மான்மிய ஒழிப்பிற்கு முன்னின்றவர்களின் பெயர்கள், மான்மிய ஒழிப்புக் கூட்டம் பற்றிய நாள் குறிப்புச் செய்தி (1921) ஆகியனவும் கவிமணி, மான்மியம் ஒழிப்பு தொடர்பான அரிய படங்கள் ஆகியன உள்ளன.

வாழ்க்கையை நகர்த்தும் கலைஞன்

முத்து பதிப்பகம், சென்னை, ஆகஸ்ட் 2008.
ரூ. 75, பக். 112, டெம்மி அளவு, 
அச்சில் இல்லை.

            காலச்சுவடு, காவ்யா, தீராநதி, உயிர்மை, ஒளிவெள்ளம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பு. திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, சுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரன் பிள்ளை, தனிநாயகம் அடிகள், கே.என். சிவராஜ பிள்ளை என்னும் தமிழறிஞர்கள், வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை, நவீன படைப்பாளி சுந்தர ராமசாமி, விமர்சகர் ஜேசுதாசன், கதைப்பாடல் பதிப்பாசிரியர் ஆறுமுகப்பெருமாள் நாடார் என்பவர்களின் மறுபக்கத்தை சுட்டும் நூல்.

தாணுமாலயன் ஆலயம் 

(சுசீந்திரம் கோவில் வரலாறு)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2008.
ரூ. 290, பக். 400, டெம்மி அளவு
அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சுசீந்திரம் ஊரில் உள்ள சிவன் கோவிலின் (தாணுமாலயன் கோவில்) விரிவான வரலாறு. சமூகத்திற்கும் கோவிலுக்கும் உள்ள உறவை, நாட்டார் வழக்காறு வாய்மொழி மரபுகளுடன் தொடர்புபடுத்தும் நூல். இந்நூலுக்கு இரா. ஸ்ரீதரின் வாழ்த்துரை, செந்தீ. நடராசனின் ஒரு பண்பாட்டு பயணம் என்ற அணிந்துரை, நீண்ட முகவுரை, நன்றியுரை, நீங்கலாக 9 இயல்களும் 32 பின்னிணைப்புகளும் உள்ளன.
            இந்நூலின் இயல்கள் ஊரும் பேரும், அனுசூயையின் கதை, கோவில் அமைப்பும் பரிவார தெய்வங்களும் பூஜைகளும் விழாக்களும் மகாசபை முதல் அறங்காவல் வரை பூசகரும் பணியாளரும் கோவிலின் சமூக ஊடாட்டம் கல்வெட்டுச் செய்திகள் சிற்பங்களும் ஓவியங்களும் ஆகியன. பின்னிணைப்பில் கல்வெட்டு செய்திகள் கதைகள் சுசீந்திரம் ஊரில் உள்ள பிற கோவில்கள் சில ஆவணங்கள் தல புராண பாடல்கள் குளம், தேர், வாகனம் பற்றிய செய்திகள்உதவிய நூற்கள் ஆகியன உள்ளன.
              இந்நூலில் கோவில் தொடர்பான சிற்பங்கள், கட்டுமானங்கள், கோபுரம், ஓவியங்கள் என்பவற்றின் 129 படங்கள் உள்ளன. இவை 88 பக்கங்களில் அமைந்தவை. இவற்றில் 19 படங்கள் அர்ட் தாளில் வண்ணப் படங்களாகும். சுசீந்திரம் ஊரின் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால வரைபடமும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வரையப்பட்ட கோவிலின் வரைபடமும், இவற்றின் விளக்கமும் உள்ளன.
       இந்நூல் பற்றி தினமலர் (2-2-2009) “தமிழகக் கோவில்கள் பற்றி வந்த அபூர்வமான நூல்களில் இது ஒன்று. ஒரு கோவில் வரலாறு எப்படி எழுத வேண்டும் என்பதன் மாதிரியாக இந்நூலைக் கொள்ளலாம் எனக் கூறும்.
இந்து நாளிதழ் (5-3-2008) ... மிக அபூர்வமான ஆராய்ச்சி நூல்; கோவிலை உற்று நோக்கி ஆராய்ந்து சேகரித்த செய்திகளின் வழி எழுதியது எனக் கூறும்.

          எழுத்தாளர் ஜெயமோகன் தன் இணையதளத்தில் “… கடின உழைப்பில் உருவாக்கியது தமிழக பண்பாட்டு வரலாற்றாசிரியர்களில் இவரும் ஒருவர்என எழுதுகிறார்.

ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
தமிழினி, சென்னை, டிசம்பர் 2007, 2014.
ரூ. 190, பக். 288, டெம்மி அளவு.
            கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் திருவட்டாறு ஊரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. நூல் ஆரம்பத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் த. பிச்சாண்டி கி.ஆ.ப. அவர்களின் அணிந்துரை, நூலாசிரியரின் முகவுரை, நன்றியுரை ஆகியன உள்ளன. நூல் 9 இயல்கள் கொண்டது. முதல் இயல் (வளநீர் வாட்டாறு) திருவட்டாறு ஊர் பின்னணியை விளக்குவது. இந்த ஊர் சங்கப் பாடலில் (புறநா.) பேசப்படுவது; தொடர்ந்த வரலாற்றுப் பின்னணி உண்டு. இரண்டாம் இயல் (வான் ஏற வழி தந்த வாட்டாறு) திருவட்டாறு ஊரின் தனி வரலாற்றை கூறுவது. நம்மாழ்வார் பாடிய தலம்; சைதன்யர் வருகை தந்த தலம் இது என கூறுவது, மூன்றாம் இயல் கோவில் அமைப்பு கட்டுமானப் பணி பற்றியது. இக்கோவில் பழமை கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை ஆதாரபூர்வமாய் சொல்வது என இவ்வியல் குறிப்பிடும் நான்காம் இயல் கருவறை பரிவார தெய்வங்கள் பற்றியது. தொடர்ந்த இயல்கள் தலபுராணம், கோவில் பூசகர், தினப்பூஜை – விழா, சிற்பம், ஓவியம், கோவில் கல்வெட்டுச் செய்திகள் என்பன பற்றிப் பேசுகின்றன.
            பின்னிணைப்பில் 25 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இவை பெருமளவில் மூல ஆதாரச் செய்திகள்; முன்பு அச்சில் வராதவையும் உண்டு; திருவட்டாரில் உள்ள பிற கோவில்கள் பற்றியும் பின்னிணைப்பில் செய்திகள் உள்ளன.
            விஷ்ணுவின் தசாவதாரங்கள் அல்லாத பிற அவதாரங்களில் ஒன்று ஆதிகேசவன். பாம்பணை மேல் பள்ளிகொண்ட வடிவம். இக்கோவிலின் சயன விக்கிரகம் முக்கியமானது. கோவில் வளாகம் பெரிது. சிற்பங்களும் அதிகம்.
            இக்கோவிலில் ஓராண்டு உழைப்பின் பலன் இந்நூல்; முக்கியமாக இப்புத்தகத்தை வெளியிட்ட தமிழினி வசந்தகுமார், இக்கோவில் படங்களை எடுக்கப் பலமுறை வந்தார். இந்நூலில் 62 பக்கங்களில் 120 படங்கள் உள்ளன. கோவில் வரைபடமும், வண்ண பீடங்களும் உண்டு.

            இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு “… திருவட்டாறு கோவிலுக்கு வந்த பிரபலங்கள் பல உண்டு; அவர்கள் நூலாசிரியரைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பாராட்டினர். அதோடு கோவிலுக்கும் மக்களுக்குமான உறவைச் சித்தரிக்கும் நூல் இதுஎன்பதும் தெரிவிக்கப்பட்டது.

சுண்ணாம்பு கேட்ட இசக்கி

யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை
நவம்பர் 2006. ரூ. 85, பக். 176, டெம்மி அளவு, 
அச்சில் இல்லை.
            கள ஆய்வு அனுபவங்களின் தொகுப்பு. 1980 முதல் 2005 வரை பல்வேறு இடங்களில் விழாக்களில் நடத்திய கள ஆய்வு அனுபவம், முறைப்படி இல்லாமல் சென்றபோது கிடைத்த அனுபவம். 18 தலைப்புகளில் உள்ள நூல். பின்னிணைப்பில் ஆய்வு நாகரிகம் சொல் புதிது இதழுக்கு அளித்த பேட்டி இரண்டும் உள்ளன.
            முகவுரை, நன்றியுரை, முனைவர் இராமச்சந்திரனின் அணிந்துரை என அமைந்தது. இந்த நூலில் பெரும்பாலானவை தோல்பாவைக்கூத்து பற்றிய செய்திகள் உள்ளன.
              இந்நூலைப் படித்துவிட்டு நாட்டார் வழக்காற்றியல் அறிஞரும் தமிழகத்தில் களஆய்வு செய்தவருமான எவலின் மாசிலாமணி மேயர், “உங்கள் அனுபவத்தில் பொதுவான உண்மை இழையோடுகிறது, மனிதர்களிடம் கொண்டுள்ள அன்பும் வெளிப்படுகிறது. இதன் சில பகுதிகளை நான் பிரஞ்ச், ஜெர்மனியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்து விட்டேன் என்றார்.
            இந்நூலில் உள்ள கட்டுரைகள் காலச்சுவடு, ஒளிவெள்ளம், சொல்புதிது, கைவிளக்கு, கன்னியாகுமரி, குமுதம், குமுதம் தீராநதி, புதுமைத்தாய், தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் வந்தவை.

            இந்நூல் குறித்து தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் விரிவான விமர்சனங்களை வெளியிட்டிருந்தன. (பிப்ரவரி 2007)

காகங்களின் கதை

காலச்சுவடு, நாகர்கோவில், 
டிசம்பர் 2006.ரூ. 35, பக். 62, 
டெம்மி அளவு.

            நாகர்கோவில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டில் 1977 ஜூன் முதல் 1988 வரை நடந்த காகங்கள்என்னும் இலக்கிய கூட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல். முகவுரையுடன், ஒவ்வொரு மாதமும் நடந்த கூட்டம் பற்றிய விலாவாரியான விளக்கம், காகங்களின் சிறப்புகூட்டம் பற்றியும், குடிசை இதழுக்கு சு.ரா. அளித்த பதிலும் இந்நூலில் உள்ளன. காகங்கள் கூட்டம் 8 நடந்தது. 13 சிறப்புக் கூட்டங்கள் வேறு, இவற்றில் பெரும்பாலான தகவல்கள் உள்ளன.
முதலியார் ஆவணங்கள்
தமிழினி, சென்னை, நவம்பர் 2006.
ரூ. 170, பக். 222, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் ஊரில் வாழ்ந்த முதலியார் குடும்பம் பாதுகாத்து வைத்திருந்த ஓலை ஆவணங்களில் தேர்ந்தெடுத்த 89 ஆவணங்களின் தொகுப்பு. இந்த ஆவணங்கள் தென் திருவிதாங்கூரின் நிர்வாகம் குறித்தவை. ஏறத்தாள கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் எழுதப்பட்டவை. தமிழ் மொழியிலும், தமிழ்மொழி எழுத்தில் மலையாள மொழியிலும் அமைந்தவை.
            இந்த ஆவணங்களில் பெரும்பகுதி கவிமணியின் கையெழுத்து பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றிற்கு சிறு முகவுரை, விளக்கம் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 4 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி முதலியார் ஆவணங்களைப் பற்றிய 56 பக்கக் கட்டுரை. இது 11 தலைப்புகள் கொண்டது. முக்கியமாக கி.பி. 14,15,16,17,18 நூற்றாண்டுகளில் விவசாயம், நெல் விலை, வரி, நிர்வாகம், படையெடுப்பு, அடிமை நிலை குறித்த செய்திகளை விவரிப்பது.
            இரண்டாம் பகுதியில் 89 முதலியார் ஆவணங்களின் மூலங்கள் உள்ளன. மூன்றாம் பகுதி பின்னிணைப்புகள். இதில் வெள்ளாடிச்சி வெள்ளாட்டி ஓலை, பறை அடிமை ஓலை, சீதன ஓலை, அருஞ்சொல் விளக்கம் என 13 தலைப்புகள் உள்ளன. நான்காம் பகுதியில் காலக் கணக்கு குறிப்புகள், இந்தியப் பஞ்சாங்கம், சுழற்சி வருஷம், எண்களைக் குறிப்பிட தமிழ் அடையாளம் என 7 தலைப்புகள்.
            நூலின் முகவுரை நன்றியுரை ஆய்வுக்குதவிய நூல்களின் பட்டியல் ஆகியன உள்ளன.

            புதிய பார்வை மாத இதழில் சோழநாடன் என்பவர் இந்நூல் குறித்து விரிவான விமர்சனம் எழுதியுள்ளார். (16- 3- 2007) தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொண்டு வந்ததில் முதலியார் ஆவணத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. பழைய ஆவணங்களைப் பதிப்பிக்கும்போது மூலத்தை மட்டுமே பலரும் (தனி நபரும் அரசு வெளியீடுகளும்) பதிப்பித்துள்ளனர். மூலத்திற்கான விளக்கவுரை ஆய்வுரை போன்றவை எழுதுவதில்லை. அ.கா. பெருமாள் அரும்பாடுபட்டு தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூலில் அந்தக் குறைகள் இல்லை. ஆவணங்களை எப்படிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற முறையில் செம்பதிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
அலைகளினூடே (தொ.ஆ.)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2005.
ரூ. 170, பக். 270, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            சுனாமியின் எதிரொலி கடற்கரை மக்களைப் பற்றிய பதிவுகள் இல்லை எனத் தெரிந்தது. இதன் விளைவு அலைகளினூடே கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்த (மே 14,15 – 2005) கருத்தரங்கக் கட்டுரைகள். 9 பேர்கள் படித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்நூலில் பின்னிணைப்புகள் மிக முக்கியமானவை. இந்நூலின் தொகுப்பாசிரியர் கடற்கரை. இளைஞர்கள், மாணவர்கள் உதவியுடன் 68 கி.மீ. பயணம் செய்து 44 கிராமங்களில் திரட்டிய செய்திகள் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களில் விரிவாக கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட செய்திகளின் சுருக்கம் தொகுப்பில் உள்ளன. 24 கிராமங்களிலும் கள ஆய்வு செய்யப்பட்ட போது கிடைத்த அனுபவம் கருத்தரங்கில் பேசப்பட்டது; அது இந்நூலில் இடம்பெறவில்லை. கள ஆய்வின்போது ஏற்பட்ட உடல் நல பாதிப்பைக்கூட பொருட்படுத்தாமல் சென்றதும் இந்நூலின் அனுபவம். கடல்சார் மக்களின் வழிபாடு தொடர்பான சொற்களம் இதில் உண்டு.
கானலம் பெருந்துறை (தொ.ஆ.)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2005.
ரூ. 50, பக். 238, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            சங்க காலத்திலிருந்து தற்காலம் வரை உள்ள இலக்கியங்களில் பேசப்பட்ட நெய்தல் நிலம் பற்றி 15 பேர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுனாமி வீசியபோது (2004 டிசம்பர் 26) நடந்த கொடுமைக்குப்பின் கடல் சார் மக்களின் நலம் கருதி இயேசு சபை நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. இக் கருத்தரங்கு நெய்தலில் நெய்த்தல் என்ற தலைப்பில் நடந்தது. இக்கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது. பின்னிணைப்பில் துணை நூல் பட்டியல் உண்டு.
சித்தூர் தளவாய்மாடன் கதை
காவ்யா, சென்னை, டிசம்பர் 2005.
ரூ.50, பக். 96, அச்சில் இல்லை.

            திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் என்ற ஊரில் குடிகொண்ட தென்கரை மகாராஜன், தளவாய் மாடன் ஆகிய இரு தெய்வங்களின் வரலாறு. விழா, கோவில் பற்றிய செய்திகள் . இந்நூல் தென்கரை மகராசன் கோவிலும் வழிபாடும், தென்கரை மகாராசன் வாழ்த்து, தளவாய் சுவாமி கதைப்பாடல், வன்னி ராசன் கதைப்பாடல் ஆகிய 4 இயல்கள், பின்னிணைப்பில் வன்னியன், வன்னிராசன், வன்னியடி மறவன் ஆகியோரின் கதைகளும், தளவாய் வண்ணப் பாடலும் உண்டு. இந்நூலில் கொடுக்கப்பட்ட கதைப்பாடல்கள் வாய்மொழி வடிவில் உள்ளவை. ஒலிநாடாவில் பதிவுசெய்து எழுதப்பட்டவை.
ஜனங்களின் சாமி கதைகள்
யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை, டிசம்பர் 2005.
ரூ.40, பக். 96, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            நாட்டார் தெய்வங்கள் பற்றிய 21 கதைகளின் தொகுப்பு. இவற்றில் வாய்மொழி வடிவில் அமைந்தவையும் உண்டு. பிற வில்லிசை பாடல்களாகவும், ஏட்டு வடிவிலும் உள்ளவை சில கதைகள். சிரம்பர நாடார் கதை, ஆந்திரமுடையார் கதை, வீணாதி வீணன் கதை.
கர்ப்பமாய்ப் பெற்ற கன்னிகள்
தமிழினி, சென்னை, டிசம்பர் 2005.
ரூ. 75, பக். 176, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            நாட்டார் பெண் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கர்ப்பமாய் பெற்ற கன்னிகள், பூக்காத மரம் பூக்காதோ, தெய்வத்தின் பிரதிநிதிகள், குருதி குடிக்கும் தெய்வங்கள், தெய்வத்தின் சாதிய உடன்பாடுகள் என 5 கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பில் சாதி தொடர்பான மிகப் பழைய புத்தகங்களின் பட்டியல், தமிழக நாட்டார் பெண் தெய்வங்களின் பட்டியல், முத்தாரம்மன் கதை ஆய்விற்கு உதவிய நூற்கள் பட்டியல் உள்ளன. சாதி தொடர்பான 219 நூற்களின் பெயர்களும் காரைக்குடி ரோஜா முத்தையா செட்டியார் நூல் நிலையத்தில் திரட்டப்பட்டவை. 200க்கு மேற்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்கள் விபரமும் இந்நூலில் உள்ளன. மத்திய அரசின் நிதி நல்கையுடன் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் போது திரட்டப்பட்ட செய்திகளே இந்த நூல்.

            வடஇந்திய தாய்த் தெய்வங்களின் பொதுவான தன்மைகளை தமிழகத்துப் பெண் தெய்வங்களுடன் பொருத்திப் பார்ப்பது முதல் கட்டுரை. தெய்வங்களின் சாதிய உடன்பாடுகள் என்ற கட்டுரை, நாட்டார் தெய்வங்களின் பொதுப்பண்பிலிருந்து சாதி அமைப்பைப் பிரிக்கமுடியாது என்பதைக் காட்டுவது. இந்நூலில் 9 படங்கள் உண்டு.
கவிமணியின் கட்டுரைகள் (ப.ஆ.)
தமிழினி, சென்னை, 2004.
ரூ. 70, பக். 160, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் கட்டுரைகள் அடங்கிய முதல் பதிப்பு. கவிமணியின் கட்டுரைகளைப் பாரி நிலையம் கவிமணியின் உரைமணிகள்என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தனர் (1954). 2003வரை அவர்கள் வெளியிட்ட பதிப்பு ஒரே மாதிரியாக இருந்தது. தமிழினியின் இப்பதிப்பில் புதிதாக மனோன்மணியத்தின் மறுபிறப்பு, ஓர் தமிழ்ப் பெரியாரின் மறைவு, தண்டமிழ் மேதை ம.பொ.சி., வருங்கால அரசியல் மொழி ஆகிய நான்கு கட்டுரைகளும், தினமணி பேட்டி ஒன்றும் (11.8.1954) சுந்தர ராமசாமி கவிமணியைப் பேட்டி கண்டு எழுதிய கட்டுரை ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர அசலாம்பிகை அம்மையாரின் இராமலிங்க சாமி சரிதம் என்னும் புத்தகத்தின் விமர்சனம் இந்நூலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் பதிப்பாசிரியரின் முகவுரை, கவிமணியின் வாழ்க்கைக் குறிப்பு, கவிமணி எழுதிய நூற்களின் பட்டியல், கவிமணியின் அரிய 9 புகைப்படங்கள் ஆகியனவும் இந்நூலில் உள்ளன.
வேத சாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
யுனைட்டேட் ரைட்டர்ஸ், சென்னை, 2004.
ரூ.40, பக். 94, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மா காலத்தில் (1729-1758) வாழ்ந்த நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றைக் கூறுவது இந்நூல். நாயர் சாதியில் பிறந்த நீலகண்டபிள்ளை சில காரணங்களால் கத்தோலிக்கர் ஆனார்; தேவசகாயம் என்னும் பெயரைப் பெற்றார். இதனால் இந்துக்களின் எதிரியானார். அதிகாரிகளால் தண்டனைப் பெற்றார். சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் குறித்து பல நாடகங்கள் உள்ளன. ஏட்டுவடிவ நாடகம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. 1858இல் பாண்டிச்சேரியில் அச்சான தேவசகாயம்பிள்ளை வரலாறு நூலின் மூலமும் எந்த மாற்றமுமின்றி இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் கதை
யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை, டிசம்பர் 2004.
ரூ. 60, பக். 120, டெம்மி அளவு, அச்சில் இல்லை.           

            எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சமூகம் சார்ந்த கொள்ளையன், பெயரில் என்ன இருக்கிறது, அழிந்துவரும் கலைஞர்கள், ஆடாது கிடக்கும் தோல்பாவைகள், ஒரு குடும்பத்தின் கதை, நம்பூதிரிகளுக்கு ஒரு சோதனை, வேணாடுத் தென்பாண்டித் தொடர்பு, பிடிச்சிவச்ச பிள்ளையாரு ஆகியனவும் முகவுரை உண்டு