Wednesday 24 September 2014

தாணுமாலயன் ஆலயம் 

(சுசீந்திரம் கோவில் வரலாறு)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2008.
ரூ. 290, பக். 400, டெம்மி அளவு
அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சுசீந்திரம் ஊரில் உள்ள சிவன் கோவிலின் (தாணுமாலயன் கோவில்) விரிவான வரலாறு. சமூகத்திற்கும் கோவிலுக்கும் உள்ள உறவை, நாட்டார் வழக்காறு வாய்மொழி மரபுகளுடன் தொடர்புபடுத்தும் நூல். இந்நூலுக்கு இரா. ஸ்ரீதரின் வாழ்த்துரை, செந்தீ. நடராசனின் ஒரு பண்பாட்டு பயணம் என்ற அணிந்துரை, நீண்ட முகவுரை, நன்றியுரை, நீங்கலாக 9 இயல்களும் 32 பின்னிணைப்புகளும் உள்ளன.
            இந்நூலின் இயல்கள் ஊரும் பேரும், அனுசூயையின் கதை, கோவில் அமைப்பும் பரிவார தெய்வங்களும் பூஜைகளும் விழாக்களும் மகாசபை முதல் அறங்காவல் வரை பூசகரும் பணியாளரும் கோவிலின் சமூக ஊடாட்டம் கல்வெட்டுச் செய்திகள் சிற்பங்களும் ஓவியங்களும் ஆகியன. பின்னிணைப்பில் கல்வெட்டு செய்திகள் கதைகள் சுசீந்திரம் ஊரில் உள்ள பிற கோவில்கள் சில ஆவணங்கள் தல புராண பாடல்கள் குளம், தேர், வாகனம் பற்றிய செய்திகள்உதவிய நூற்கள் ஆகியன உள்ளன.
              இந்நூலில் கோவில் தொடர்பான சிற்பங்கள், கட்டுமானங்கள், கோபுரம், ஓவியங்கள் என்பவற்றின் 129 படங்கள் உள்ளன. இவை 88 பக்கங்களில் அமைந்தவை. இவற்றில் 19 படங்கள் அர்ட் தாளில் வண்ணப் படங்களாகும். சுசீந்திரம் ஊரின் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால வரைபடமும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வரையப்பட்ட கோவிலின் வரைபடமும், இவற்றின் விளக்கமும் உள்ளன.
       இந்நூல் பற்றி தினமலர் (2-2-2009) “தமிழகக் கோவில்கள் பற்றி வந்த அபூர்வமான நூல்களில் இது ஒன்று. ஒரு கோவில் வரலாறு எப்படி எழுத வேண்டும் என்பதன் மாதிரியாக இந்நூலைக் கொள்ளலாம் எனக் கூறும்.
இந்து நாளிதழ் (5-3-2008) ... மிக அபூர்வமான ஆராய்ச்சி நூல்; கோவிலை உற்று நோக்கி ஆராய்ந்து சேகரித்த செய்திகளின் வழி எழுதியது எனக் கூறும்.

          எழுத்தாளர் ஜெயமோகன் தன் இணையதளத்தில் “… கடின உழைப்பில் உருவாக்கியது தமிழக பண்பாட்டு வரலாற்றாசிரியர்களில் இவரும் ஒருவர்என எழுதுகிறார்.

No comments:

Post a Comment